Dṛk Dṛśya Viveka - dṛgdṛśyaviveka
by Sri Shankaracharya
Tamil translation by Bhagavan Ramana
ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அருளிய திருக்கு திருசிய விவேகம்
அவதாரிகை
‘ஏக-மேவாத்விதீயம்-பிரஹ்ம’ அதாவது இரண்டற்ற பிரஹ்மம் ஒன்றே யுள்ளது என்னும் அத்வைத சித்தாந்தத்தில், பிரஹ்மம் ஒன்றேயாயின் அது விளங்காது பிரபஞ்சம் தோற்றுவானேன்? எனச் சங்கை நிகழும் உத்தமாதிகாரியின் பொருட்டு, அப்பிரஹ்மமாய தன் சொரூபத்தில் அந்நியமின்றி அநாதியேயுள்ள ஆவரண விக்ஷேபரூப அவித்யை என்னும் அற்புத சக்தி, (பிரகாசத்திலும் அந்தகாரத்திலும் தோற்றாது, இருட்டின் வழி யாகத் தோற்றும் பொய்ப் பிரதிபலனப் பிரகாசத்திற் காணப்படும் படச் சாயாகாக்ஷிபோல) அவ்விருளையொத்த தன் வழியாயத் தோற்றும் நினைவு ரூபமான ஆத்மப் பிரதிபலன மித்யா விக்ஷேபப் பிரகாசத்தில் முதலி லுண்டான கர்த்திருரூப அகங்கார ஜீவன், தன்கரணரூபமனம் பூர்வ வாசனையாற் காட்டுந் திருதியச் சாயாகாட்சியை ஜாக்கிர சொப்பனாதிகளிற் சத்தியமாய்ப் பார்க்க, யதார்த்த சொரூபத்தை மறைத்துத் திருசியத் தோற்றத்திற்கு மூலகாரணமான ஆவரணம், திருசியம் தோற்றுங்காலும், அலையாதிகளுடன் கூடின சமுத்திரம்போல் ஏகமாயிருக்குந் தனக்கும் அத்தோற்றத்திற்கும் பேதந் தெரியவொட்டாதிருத்தலின், பூர்வசம்ஸ் காரத்தினால் அத் தோற்றத்திலுள்ள திருஷ்டியை நீக்கித் தன்னையே பாஹ்யாந்தர திருஷ்டிபேதமின்றி எப்போதும் நாடும் சஹஜசமாதிப் பழக்கத்தால் அவ்வாவரணம் நீங்கவே, அத்விதீயப் பிரஹ்மாத்ம சொரூபமாத்திரம் மிஞ்சிப் பிரகாசிக்கும் என ஆசாரியர் அத்வைத சித்தாந்த ரகசிய தாத்பரியத்தை விரிவின்றிச் சுருக்கமா யறிவித்த இச்சிறு கிரந்த மொன்றுமே உத்தமாதிகாரிகளான முமுக்ஷுக்கட்டுச் சாலும்.
வெண்பா
திருக்கு திருசிய விவேகந் தெரித்த திருக்காமச் சங்கர தேவே – திருக்கு திருசிய மென்னுந் திருக்கறவே நெஞ்சி லொருசிவமா யோங்கு மொளி.
நூல்
திருசியமா மிவையாவும் அனாத்மா. நிர்விகாரதிருக்கே ஆத்மா. இவ் வாத்மாநாத்ம விவேகமே கோடி கிரந்தங்களாலுங் கூறப்படுகின்றது. e
நாம் பார்க்கும் இப்பிரபஞ்சவுருவம் கண்ணாற் காணப் படுவதால் திருசியம், காணுங்கண் திருக்கு; அக்கண் மனதாலறியப்படுவதால் திரிசியம், மனம் திருக்கு; விருத்திகளுடன் கூடின அம்மனம் சாக்ஷியாகிய ஆத்மா வாலறியப் படுவதால் திருசியம், ஆத்மாதிருக்கு; அது ஒன்றாலு மறியப் படாததால் திருசியமன்று. நீல பீதாதி வர்ணங்கள், ஸ்தூல சூக்ஷ்மம், நெட்டை, குட்டை முதலிய நானாரூபங்களைக் கண் ஏகமாயும்; நேத்திரத்தின் அந்த மந்த படுத்துவாதி நானா தர்மங்களையும், அங்ஙனமே சுரோத்திராதிகளின் தர்மங்களையும் மனம் ஏகமாயும்; காமம், ஸங்கல்பம், சந்தேகம், சிரத்தை, அசிரத்தை, தைரியம், அதைரியம், பயம், லஜ்ஜை, நல்ல கெட்ட புத்தி முதலிய நானா மனோதர்மங்களை ஆத்மா ஏகமாயும் இருந்தறிகின்றது. இவ்வாத்மா உதிக்காது; ஒடுங்காது; பெருக்காது; சிறுக்காது. தன் பிரகாசத்தாலேயே சுயம் பிரகாசித்து, சாதனாந்தரா பேக்ஷையின்றி யன்யத் தையும் பிரகாசிப்பிக்கின்றது.
புத்தியு (சமஷ்டிமனமும்)ம் சிற்சாயையுடன்கூடி அகங்காரம், அந்தக்கரணம் (மனம்) என இருவிதம். சிச்சாயையோடு தப்தாயப்பிண்டம்போல் ஒன்றா யிருக்கும் அகங்காரச் சேர்க்கையாலேயே தூலதேகமும் சேதனம்போற் றோற்றுகிறது. இவ்வகங்காரத்தின் தாதாத்மியம் (சேர்க்கை) சிச்சாயையோடு சஹஜமாயும், தேகத்தோடு கர்மஜமாயும் ஆத்மாவில் பிராந்திஜமாயும் இங்ஙனம் மூன்று விதம். புத்தியுபாதி யுள்ளவரை ஸஹஜத்திற்கு நாச மில்லை; ஆனால் ஞானத்தாற் பொய்யாம். பிராந்திஜமும் கர்மஜமும் முறையே, ஸ்த்ரூப ஆத்மாவில் யாதொன்றன் சம்பந்தமுமில்லை எனக் காணும் ஞானத்தாலும் பிராரப்தகர்ம க்ஷயத்தாலும் நசிக்கும். தேகம் ஜடமாயிருக்கும் சுழுப்தியில், அகங்காரம் முற்றும் லயித்திருக்கும். அது பாதி விரிந்தது சொப்பனம்; முற்றும் விரிந்தது ஜாக்கிரம். மனவிருத்திதான் பூர்வ வாசனையால், சொப்பனத்தில் ஆந்தரப் பிரபஞ்சத்தையும், ஜாக்கிரத்தில் பாஹ்யப்பிரபஞ்சத்தையும் கற்பிக்கின்றது. இம்மன அகங்காரங்கட் குபாதான ஜடலிங்கதேகமே அவஸ்தாத்திரயத்தையும் ஜனன மரணாதி களையு மடைகிறது. காரண தேகமான மாயை, விக்ஷேபம் ஆவரணம் என்னும் இரு சக்தி களுடனிருக்கும். அதில் விக்ஷேப சக்தியே லிங்கதேகாதி பிரஹ்மாண் டாந்தமான நாமரூபப் பிரபஞ்சமனைத்தையும் சமுத்திரத்தில் நுரையாதி களைப்போல சச்சிதானந்த வஸ்துவில் சிருஷ்டிக்கின்றது. மற்ற ஆவரண சக்தி அகத்தில் திருக்குதிருசியங்கட்கும் புறத்தில் பிரஹ்மப் பிரபஞ்சங்கட்கும் சிறிதும் பேதம் தெரியவொட்டாமல் மறைக்கின்றது. இதுவே சம்சார காரணம். ஆத்மசந்நிதியி லடுத்திருக்கும் லிங்கதேகத்தோடு கூடிய சிதா பாசனாகிய ஜீவனே வியாவகாரிகன். இந்த ஜீவத்வம் ஆரோபத்தால் சாக்ஷியிற் பிரகாசிக்கின்றது. ஆவரணம் நஷ்டமாயின் பேதம் தெரிகிறது; ஆரோபம் இல்லாமற் போகிறது. அங்ஙனமே பிரஹ்மப் பிரபஞ்சபேதம் தெரியவொட்டாது மறைத்துள்ள ஆவரணவசத்தாலேயே பிரஹ்மம் நானா ரூபமாய்ப் பிரகாசிக்கின்றது. ஆவரணம் நஷ்டமானால் அவ்விரண்டிற்கும் பேதம் தெரிகிறது; பிரபஞ்ச விகாரங்களெவையும் பிரஹ்மத்தி லிருக்கிற தில்லை.
அஸ்தி, பாதி, பிரியம், நாமம், ரூபம் என்னும் ஐந்து அம்சங்களில் சச்சிதா னந்தமான முந்தின மூன்றும் பிரஹ்மரூபம்; நாமரூபங்கள் பிரபஞ்சரூபம். சச்சிதானந்தங்கள் ஆகாசாதி பஞ்சபூதங்களிலும், தேவ, திரியக், மனுஷ்யர் களிலும் அபின்னமாயிருக்கின்றன. நாமரூபங்களோ பின்னமாயிருக்கின்றன. ஆதலால், நாமரூபங்களை யுபேக்ஷித்து ஸச்சிதானந்த தற்பரனாய், ஹிருத யத்திலோ வெளியிலோ எப்போதும் சமாதி செய்ய வேண்டும்.
ஸவிகற்பம், நிர்விகற்பம் என ஹிருதயத்திற் செய்யும் சமாதி இரண்டுவிதம். ஸவிகற்பசமாதியும் திருசியானுவித்தம், சப்தானுவித்தம் எனப் பின்னு மிருவகை. காமாதி திருசிய சித்த விருத்திகட்கு சாக்ஷியாய்த் தன்னைச் சிந்திப்பது ஆந்தர திருசியானுவித்த ஸவிகற்ப சமாதி. ‘நான் அசங்க சொப் பிரகாச ஸச்சிதானந்த அத்வைத ஸ்வரூபன்’ என்றறிவது ஆந்தர சப்தானுவித்த ஸவிகற்ப சமாதி. இவற்றாலுண்டாகும் சுவானுபவ ரசாவேசத்தால் திருசியம் சப்தம் இரண்டையும் விட்டு நிவாத ஸ்தல தீபம்போல நிச்சலமாயிருப்பது ஆந்தர நிர்விகற்ப சமாதி. ஹிருதயத்திற் போலவே வெளியிலும் திருசிய வஸ்துக்களின் நாம ரூபங்களை யுபேக்ஷித்து ஸத்ரூபத்தைப் பார்ப்பது பாஹ்ய திருசியானுவித்த ஸவிகற்பசமாதி. அச் சச்சிதானந்த வஸ்துவையே அகண்டைகரஸபிரஹ்மம் என விடாதறிவது பாஹ்ய சப்தானுவித்த ஸவிகற்பசமாதி. இவ்விரண்ட னனுபவத்தால் நிஸ் தரங்க சமுத்திரம்போல் அகண்டமாய் நிச்சலமாயிருப்பது பாஹ்ய நிர்விகற்ப சமாதி. இந்த ஷட் சமாதிகளாலும் நிரந்தரம் காலந்தள்ள வேண்டும். இவற்றால் தேகாபிமானம் நீங்கி ஸதா பரமாத்மாவிலேயே ஸ்திதி செய்யும் மனம் எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் சமாதியே. இந்நிரந்தர சமாதிப் பழக்கத்தால் அப்பராவரமான பரமாத்மாவை சாக்ஷாத்கரித்த மாத்திரத்தில் ஹிருதயக் கிரந்தி பேதிக்கப்படும்; சகல சம்சயங்களும் நஷ்டமாம்; கர்மங்கள் நாசமுறும்.
அவச்சின்னன், சிதாபாசன் (வியாவகாரிகன்), ஸ்வப்நகல்பிதன் என்னும் மூவிதஜீவரில் அவச்சின்னன் பாரமார்த்திகன். இவனும் கற்பிதனே; அவச்சேத்தியமான சொரூபமே வாஸ்தவம். ஆரோபத்தால் இவனில் ஜீவத்வத்தைக் கற்பிப்ப தன்றி இவன் ஸ்வபாவத்தில் பிரஹ்மமே. இந்தப் பாரமாத்திக ஜீவனுக்கே பூர்ண பிரஹ்மத்தோடு ஏகத்வம் ‘தத்வமஸி’ யாதி மகாவாக்கியங்களாற் சொல்லப்படுகிறதன்றி இதரஜீவர்க்கல்ல. பிரஹ் மத்தில் அநாதி கற்பிதமான ஆவரண விக்ஷேபாத்மிகையான மாயை, அவ் வகண்ட பிரஹ்மத்தை மறைத்து ஜகத்து ஜீவர்களைக் கற்பிக்கின்றது. புத்தியிலிருக்கும் சிதாபாசனான கற்பிதஜீவனே, கர்த்தா, போக்தா, பூத பௌதிகப் பிரபஞ்சமனைத்தும் போக்கிய ரூபம். அநாதிமுதல் மோக்ஷம் வரை வியவகாரத்திருத்தலால், இந்த ஜீவ ஜகமிரண்டும் வியாவகாரிகம். இவ்வியாவகாரிகனி லிருக்கும் ஆவரண விக்ஷேபரூப நித்திரா சக்தி இவனை மறைத்து, முன்பார்த்ததும் நூதனமுமான ஜீவஜகத்தை சொப்பனத்திற் கற்பிக்கின்றது. பிரதீதி காலமாத்திர மிருத்தலால் சொப்பனத்தினின்று முணர்ந்தவர்க்குப் பின் சொப்பனமின்மையால் பிராதிபாஸிக ஜீவஜக மிரண்டும் பிராதிபாஸிகமாம். பிராதிபாஸிக ஸ்வப்நத்தைப் பிராதிபாஸிகன் சத்தியமாயும் வியாவகாரிகன் அசத்தியமாயும், வியாவகாரிக ஜகத்தை வியாவகாரிகன் மெய்யாயும் பாரமார்த்திகன் பொய்யாயு மறிகிறான். பாரமார்த்திகனுக்குப் பிரஹ்மத்தோடுள்ள ஏகத்வம் பாரமார்த்திகமே. அவ்வேகத்வத்தை யறிந்தொன்றையும் பார்ப்பதில்லை. பார்க்கின் மித்தையே.
ஜலதர்மமான மாதுர்யம், திரவத்துவம், சைத்தியம் இவை அலையிலும் அதிலுள்ள நுரையிலு மிருப்பதுபோல ஆத்மாவின் சச்சிதானந்த தர்மங்கள் தன்னிற் கற்பித சம்பந்தத்தால் வியாவகாரிகனிலும் அவன் மூலமாய்ப் பிராதிபாஸிகனிலும் கலந்திருக்கின்றன. நுரை சைத்தியாதி அதன் தர்மங்கள் அலையிலும், அலை யதன் திரவத்துவாதி தர்மங்கள் ஜலத்திலும் லயித்து முன்போல் சமுத்திர மாத்திரமே யிருப்பதுபோல, பிராதிபாஸிகன் அவனது தர்மங்கள் வியாவகாரிகனிலும், வியாவகாரிகன் அவனது தர்மங்கள் பாரமார்த்திகனிலும் லயித்துப் பூர்வம்போல் சச்சிதானந்த பிரஹ்மமாத்திரமே பிரகாசிக்கின்றது.
திருக்கு திருசிய விவேகம் சம்பூர்ணம் ஓம் தத் ஸத் பிரஹ்மார்ப்பணமஸ்து.